fbpx
January 28, 2016 நிலக்கடலை மகசூல் அதிகரிக்க…

நிலக்கடலை மகசூல் அதிகரிக்க…

நிலக்கடலையில் அமோக மகசூல் பெற ஜிப்சம் இட வேண்டும் என கோபி வேளாண்மை அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி கூறியதாவது:
நிலக்கடலை உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இது, தாவர எண்ணெய் உற்பத்தியில் முக்கிய இடம் பெறுவதோடு, நல்ல தரம் வாய்ந்த புரதம், தேவையான அளவு சத்துகள் அடங்கிய உணவுப் பொருளாகவும் விளங்குகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த நிலக்கடலைப் பயிரை சாகுபடி செய்யும்போது அதன் மகசூலை அதிகரிப்பதற்கு ஜிப்சம் உரம் மிகவும் பயன்படுகிறது. ஜிப்சம் உரத்தின் ரசாயனப் பெயர் கால்சியம் சல்பேடி எனப்படுகிறது. இதில், கால்சியம் (சுண்ணாம்புச் சத்து) 23 சதவீதம் வரையிலும், சல்பர் (கந்தகச்சத்து) 18 சதவீதம் வரையிலும் உள்ளது.
நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய், புரதப் பயிர்கள் அனைத்துக்கும் ஜிப்சம் அவசியம் இட வேண்டும். ஏனெனில், இந்தப் பயிர்களுக்கு மிகவும் அவசியமான கந்தகச் சத்து ஜிப்சத்தில்தான் அதிக அளவிலும், குறைந்த விலையிலும் கிடைக்கிறது.
தமிழகத்தில் அனைத்துப் பகுதி மண் வகைகளிலும் கந்தகச்சத்து குறைபாடு காணப்படுகிறது.
இதன் காரணமாக விளைச்சல் குறைவதுடன், எண்ணெயின் அளவும் குறைகிறது. பயிர் வளர்ச்சி குன்றி வேர் முடிச்சுகள் பாதிப்படைவதால் தழைச்சத்தை நிலை நிறுத்துவதும் பாதிக்கப்படுகிறது.
ஜிப்சம் இடுவதால் இந்தக் குறைபாடுகள் நீக்கப்படுகின்றன. மேலும், ஜிப்சம் இடுவதால் மண் இறுக்கம் குறைந்து நிலக்கடலையின் பருமன் ஒரே சீராகவும், திரட்சியாகவும் ஆகிறது.
நிலக்கடலைப் பருப்பு விதைக்கும்போது, ஏக்கருக்கு 80 கிலோவும், விதைத்த 45-ஆவது நாளில் களை வெட்டி மண் அணைக்கும்போது, ஏக்கருக்கு 80 கிலோவும் ஆக இரண்டு முறை மொத்தம் 160 கிலோ ஜிப்சம் இட வேண்டும். நிலக்கடலை மட்டுமல்லாது களர் மண் நிலங்களின் பயிர் மகசூலைக் கூட்டவும் ஜிப்சம் அற்புதமாகச் செயல்படுகிறது.
களி மண் அடர் தன்மையைக் கூட இலகுவாக்கி வேர் வளர்ச்சிக்கு ஜிப்சம் துணை புரிகிறது. மண்ணின் நீர்ப்பிடிப்புத் தன்மையை அதிகமாக்குகிறது. மேலும், நெல், கரும்பு உள்ளிட்ட பல்வேறு பயிர் சாகுபடியின் போதும் ஜிப்சம் இட்டு நிலத்தை மேம்படுத்தலாம் என தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!