முன்பெல்லாம் லாபமோ நஷ்டமோ ஒரே பயிரை விளைவித்துவிட்டு விவசாயிகள் பேசாமல் இருந்தார்கள். இது கொஞ்சம் கொஞ்சமாக மாறி, ஊடுபயிர் விவசாயம் தற்போது பரவலாகி வருகிறது.
நடவுசெய்யும் முதன்மைப் பயிருக்கு ஏற்ற ஊடுபயிர்களை விளைப்பதன் மூலம் விவசாயிகள் நஷ்டத்தைத் தவிர்க்க முடிகிறது, பல நேரம் கூடுதல் பலனையும் பெற முடிகிறது. இதனால் ஒரு பயிரை நம்பி விவசாயம் மேற்கொண்ட நிலை மாறி, ஊடுபயிர் விவசாயம் மூலம் பல்வேறு பயிர்கள் பயிரிடும் முறைக்கு விவசாயிகள் மாறிவருகின்றனர்.
ஒரே பாசனம்
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையைச் சேர்ந்தவர் விவசாயி ஏ. ரசூல் மொகைதீன். இவர் தன்னுடைய தென்னந்தோப்பில் பாக்குமரம், ஜாதிக்காய் போன்றவற்றை ஊடுபயிராகப் பயிரிட்டுள்ளார். பணப்பயிரான மிளகு, பாக்கு மரத்தைப் பற்றி படர்ந்து மேலே கொடியாக ஏறுகிறது.
தென்னைமரத்தில் ஊடுபயிராகக் கோக்கோ பயிரிட வேளாண்மைத் துறையினரால் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் கோக்கோவைவிட பாக்குமரம், ஜாதிக்காய், மிளகுக் கொடிகள் மூலம் அதிக லாபம் கிடைப்பதால், கோக்கோவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மற்ற ஊடுபயிர்களை நடவுசெய்துள்ளார் ஏ. ரசூல் மொகைதீன்.
தென்னந்தோப்பு முழுவதும் சொட்டுநீர்ப் பாசனம் கொடுத்துள்ளார். இதனால் தென்னைக்கு நீர்ப்பாசனம் கிடைக்கும்போதே அருகில் நடப்பட்டுள்ள பாக்குமரம், ஜாதிக்காய் மரம், மிளகுக் கொடி ஆகியவற்றுக்கும் பாசனம் கிடைக்கிறது.
பராமரிக்காத மிளகில் லாபம்
தென்னை மரங்களில் ஏறிக் காய் பறிக்க ஒரு மரத்துக்கு ரூ.15 வரை கூலி கேட்கப்படுவதால் செலவைக் குறைப்பதற்காக மரத்தில் இருந்து தேங்காய் விழும்வரை விட்டுவிடுகிறார்.
இந்தத் தேங்காய்கள் கொப்பரைக்கு (எண்ணெய் எடுக்க) பயன்படுத்தப்படுகின்றன. தேங்காய் விற்பனையைவிட கொப்பரை விற்பனையில் கணிசமான லாபம் கிடைக்கிறது. பாக்குமரத்தை ஒப்பந்த அடிப்படையில் மொத்தமாகப் பேசிவிட்டால், வாங்குபவர்களே தோட்டத்தில் வந்து பறித்துச் செல்கின்றனர். ஜாதிக்காய் மருத்துவ குணம் மிக்கது என்பதால் தேடி வந்து வாங்கிச் செல்கின்றனர். மிளகு விளைச்சலை அறிய, ஒரு மிளகுக் கொடியைப் பார்த்தாலே தெரிந்துவிடுகிறது. மிளகு கொத்துக்கொத்தாகக் காய்த்துக் குலுங்குகிறது. சந்தையில் மிளகுக்கு எப்போதும் மவுசு உண்டு என்பதால், பண்ணையில் தனியாகப் பராமரிக்காத மிளகுக் கொடியே அதிக வருவாயைக் கொடுக்கிறது.
தென்னைமரங்களின் அடிப்பகுதியில் மண்புழுக்கள் ஏராளமாக வளர்க்கப்படுகின்றன. இவையே மரத்துக்கு இயற்கை உரங்களைத் தருகின்றன. இதனால் தனி உரச் செலவு இல்லை. சொட்டுநீர்ப் பாசனம் மூலம் அவ்வப்போது தண்ணீரை முறையாகப் பாய்ச்சினாலே போதும் என்றநிலை உள்ளது.
நஷ்டத்துக்கு வழியில்லை
தன்னுடைய பண்ணைய முறை குறித்து விவசாயி ஏ. ரசூல் மொகைதீன் பகிர்ந்துகொண்டது: “தென்னையை மட்டுமே நம்பியிருந்தால் திடீரென விலை வீழ்ச்சி ஏற்படும்போது விவசாயிக்கு நஷ்டம் ஏற்படும். இதனால் அடுத்து மரங்களைப் பராமரிக்கச் சிரமப்பட வேண்டியிருக்கும். இதனால்தான் ஊடுபயிர்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். தேங்காய்கள் வழக்கமான வருமானத்தைத் தந்தாலும், தென்னையைப் பராமரிக்கும் செலவைக் கொண்டே ஜாதிக்காய், பாக்குமரம், மிளகுக் கொடி ஆகியவற்றை ஊடுபயிராக விளைவிப்பதால் கூடுதல் வருவாய் கிடைக்கிறது.
ஒரே செலவு என்றாலும், தென்னை, ஜாதிக்காய், பாக்கு, மிளகு என நான்கு வழிகளில் பலன் கிடைக்கிறது. இப்படி முதன்மைப் பயிருக்கு இடையே ஊடுபயிர்களைத் தேர்வு செய்து பயிரிட்டால், ஒரு பயிருக்கு விலை இல்லாத நிலை ஏற்பட்டாலும், மற்றவை சமாளித்துவிடும். எனவே, விவசாயிகள் எதிர்காலத்தில் ஒரு பயிர் விவசாயம் செய்வதைவிட, ஊடுபயிராக வேறு பயிர்களையும் பயிரிட்டால் எந்தவிதத்திலும் விவசாயத்தால் நஷ்டம் அடைய வாய்ப்பில்லை” என்றார்.