கூடுதல் லாபம் கிடைக்க குதிரைவாலி பயிரிடலாம் என வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
பழநி மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் கடந்த வாரம் 2 நாட்கள் லேசான மழை பெய்தது. இதனால் மானாவாரி நிலங்களில் ஈரப்பதம் ஏற்பட்டுள்ளது. கிணற்றுப் பாசனம் உள்ளவர்கள் தங்களது நிலங்களில் குறுகிய காலப் பயிர்களை பயிரிட ஆரம்பித்துள்ளனர். குறுகிய காலப்பயிரில் கூடுதல் லாபம் கிடைக்க குதிரைவாலி பயிரிடலாமென வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர். குதிரைவாலி பயிரிட கோ 1, கோ (கேவி)2 ஆகியவை ஏற்ற ரகங்கள் ஆகும்.
இறவையாக சித்திரை மற்றும் ஆடிப் பட்டங்களிலும், மானாவாரியாக ஆடி மற்றும் புரட்டாசிப் பட்டங்களிலும் குதிரை வாலியைப் பயிரிடலாம். கை விதைப்பு முறையாக இருந்தால் ஹெக்டேருக்கு 12.5 கிலோ விதையும், விதைப்பான் கொண்டு வரிசை விதைப்பாக இருந்தால் ஹெக்டேருக்கு 10 கிலோ விதையும் பயன்படுத்த வேண்டும். இடைவெளி 22.5 சென்டிமீட்டருக்கு 10 சென்டிமீட்டர் என்று இருக்க வேண்டும். ஒரு ஹெக்டேர் நிலத்தில் 5 டன் மக்கிய தொழு உரத்தை கடைசி உழவின்போது பரப்பி, பின் உழ வேண்டும்.
ஒரு ஹெக்டேருக்கு முறையே 44:22 கிலோ தழை மற்றும் சாம்பல் சத்துகளைப் பரிந்துரைக்கப்பட்ட அளவில் இட வேண்டும். வரிசை விதைப்பு செய்திருந்தால் 3 முறை இடை உழவும், ஒரு முறை கை களையும் எடுக்க வேண்டும். சரியான பருவத்தில் விதைக்கும்போது எந்த வகை பூச்சி மற்றும் பூஞ்சாணமும் அதிகமாக இந்தப் பயிரை தாக்குவதில்லை.
கதிர்கள் நன்கு காய்ந்து முற்றிய பிறகு அறுவடை செய்ய வேண்டும். தானியங்களைப் பிரித்த பின் உள்ள தட்டையையும் நன்கு உலர்த்தி சேமித்து வைத்தால் ஆண்டும் முழுவதும் கால்நடைகளுக்குத் தீவனமாகத் தரலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு விவசாயிகள் அந்தந்தப் பகுதியில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.