நிலக்கடலைக்கு ஆவணிப்பட்டம் ஏற்றது. சாகுபடி நிலத்தை சட்டிக்கலப்பையால் உழுது 7 நாட்கள் காய விட வேண்டும். பிறகு, 50 சென்ட் நிலத்துக்கு ஒரு டிராக்டர் அளவு மட்கிய சாணத்தைக் கொட்டி டில்லர் மூலம் நன்கு உழுது, 10 அடி நீளம், 8 அடி அகலத்தில் பாத்தி எடுக்கவேண்டும். பாத்திகளுக்கான இடைவெளி 2 அடி இருக்க வேண்டும். 50 சென்ட் நிலத்தில் 130 பாத்திகள் வரை எடுக்கலாம். பிறகு, பாத்திகளில் முக்கால் அடி இடைவெளியில் விதைக்கடலையை விதைக்கவேண்டும் (50 சென்ட் நிலத்துக்கு 20 கிலோ விதைக்கடலை தேவைப்படும்). நடவு செய்தவுடன் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு 3 நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்த 3-ம் நாள் முளைப்பு எடுக்கும். விதைத்த 15, 25-ம் நாட்களில் களை எடுத்து, செடிகளின் தூர் பகுதியில் மண் அணைக்க வேண்டும்.
10 நாளுக்கு ஒரு முறை ஊட்டம்.. வாரம் ஒரு முறை பூச்சிவிரட்டி!
10-ம் நாள், 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் ஜீவாமிர்தம் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். 20-ம் நாள் 10 லிட்டர் தண்ணீரில் 150 மில்லி மீன் அமிலம் கலந்து தெளிக்கவேண்டும். இப்படி சுழற்சி முறையில் 10 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி மாற்றித் தெளிக்கவேண்டும்.
20 முதல் 25-ம் நாளில் பூப்பூக்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் சிவப்புக் கம்பளிப் புழுத்தாக்குதல் இருக்கும். இந்த சமயத்திலிருந்து, வேப்பங்கொட்டைக் கரைசல் மற்றும் இஞ்சி-பூண்டுச் சாறை வாரம் ஒரு முறை சுழற்சி முறையில் மாற்றி மாற்றித் தெளிக்கவேண்டும்.
4 கிலோ வேப்பங்கொட்டையை உரலில் இடித்து, 10 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் 2 நாட்கள் ஊற வைத்தால் வேப்பங்கொட்டைக் கரைசல் தயார். இதை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவேண்டும்.
இஞ்சி-அரைகிலோ, பூண்டு-அரைகிலோ, பச்சை மிளகாய்-கால்கிலோ ஆகியவற்றை உரலில் இடித்து, 5 லிட்டர் தண்ணீரில் கரைத்தால், இஞ்சி-பூண்டுக் கரைசல் தயார். இதை வடிகட்டி, 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவேண்டும்.
செடியின் இலைகளில் மஞ்சள் கலந்த வெளிர் நிறம் தெரிந்தாலோ, செடி வாடலாகத் தெரிந்தாலோ.. கால்கிலோ பிரண்டைத்தண்டு, கால்கிலோ வேலிப்பருத்தி இலை, கால்கிலோ வேப்பிலை ஆகியவற்றை உரலில் இடித்து, 7 லிட்டர் மோரில் 2 நாட்கள் ஊற வைத்து, வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவேண்டும்.
110-ம் நாளில் இருந்து 120-ம் நாளுக்குள் அறுவடை செய்யலாம்.