fbpx
January 28, 2018 புடலை மற்றும் பீர்க்கன் சாகுபடி செய்யும் முறை

புடலை மற்றும் பீர்க்கன் சாகுபடி செய்யும் முறை

ஒரு ஏக்கர் நிலத்தில் புடலை, பீர்க்கன் சாகுபடி செய்யும் விதம் பற்றி காண்போம்.

புடலை, வடிகால் வசதியுள்ள அனைத்து மண்ணிலும் வளரும். வீரிய ரக புடலைக்கு பட்டம் தேவையில்லை. புடலை வயது 160 நாட்கள், பீர்க்கன் வயது 180 நாட்கள், இவற்றை ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம். தொழுவுரம் கொட்டி, உழவு செய்து தயாராக உள்ள, 6 அடி இடைவெளியில் ஓர் அடி அகலத்தில் நீளமான பார் எடுத்துக்கொள்ள வேண்டும். பாரின் மத்தியில் ஓர் அடிக்கு ஒரு விதை வீதம் குட்டை புடலை விதையை ஊன்ற வேண்டும். விதையை ஊன்றுவதற்கு முன்பாக சாணிப்பால் கரைசலில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரே பாரில், முதலில் ஒரு குறும்புடலை விதை, ஓர் அடி விட்டு மீண்டும் ஒரு குறும்புடலை விதை, மூன்றாவது அடியில் பெரும்புடலை விதையை ஊன்ற வேண்டும். இதே முறையில் மாற்றி மாற்றி இரண்டு பாத்திகள் புடலை நடவு செய்த பிறகு, மூன்றாவது பாத்தியில் செடிக்கு செடி ஓர் அடி இடைவெளியில் பீர்க்கன் விதைகளை நடவு செய்ய வேண்டும்.

நடவு செய்த பிறகு, மூன்றாவது நாள் புடலையும், ஐந்தாவது நாள் பீர்க்கனும் முளைக்கும். செடிகளில் நான்கு இலை வந்தவுடன், ஒரு பிரி சணல் கயிறு மூலம் செடியையும் பந்தலையும் இணைக்க வேண்டும். கயிற்றின் ஒரு முனையை செடியின் அடி இலையிலும், அடுத்த முனையை பந்தலிலும் கட்டிவிட வேண்டும். மூன்று நாளைக்கு ஒரு முறை சணலில் சுற்றிவிட வேண்டும். பக்க சிம்புகள் இருந்தால் கிள்ளி எடுத்துவிட வேண்டும். அப்போதுதான் கொடி வேகமாக பந்தலை அடையும். கொடி பந்தலைத் தொட்டதும், வாழை நார் மூலமாக, கொடிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் கம்பிகளில் கட்டி விடவேண்டும். 25 முதல் 30 நாளைக்குள் கொடி பந்தலில் படர்ந்து விடும். அந்த நேரத்தில் வளர்ச்சி ஊக்கியாக பயோ உரங்களை ஏக்கருக்கு 50 கிலோ வரை கொடுக்கலாம்.

இந்த உரத்தை செடியின் தூருக்கு அருகில், கையால் கொஞ்சம் பள்ளம் பறித்து, அதில் வைத்து மண் அணைத்துவிட வேண்டும். நிலத்தின் ஈரம் காயாமல் மூன்று நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும். மூன்று பாசனத்துக்கு ஒரு முறை 10 கிலோ கடலைப்பிண்ணாக்கை கரைத்து பாசன நீருடன் கலந்துவிட்டால், செடிகளின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். அதேசமயம், அதிக பாசனமும் கூடாது. 30-ம் நாளுக்கு மேல் பூவெடுக்கும். அந்த நேரத்தில் சில பயோ டானிக்குகளை தெளித்தால் பூக்கள் உதிராமல் பிஞ்சாக மாறும். குறும்புடலை, நீளபுடலை இரண்டும் 45 நாட்களுக்கு மேல் காய் அறுவடைக்கு தயாராக இருக்கும்.

பீர்க்கன் மகசூலுக்கு வர 65 முதல் 80 நாட்கள் வரை ஆகும். அதுவரை, குறும்புடலை இரண்டு தினங்களுக்கு ஒருமுறையும், பெரும்புடலை மூன்று நாட்களுக்கு ஒரு முறையும் அறுவடை செய்யலாம். 80 நாட்களுக்கு மேல் ஒருநாள் விட்டு ஒருநாள் பீர்க்கன் அறுவடை செய்யலாம். ஆக, சுழற்சி முறையில் தினமும் ஏதாவது ஒரு காய் அறுவடை நடந்துகொண்டே இருக்கும். ஒவ்வொரு அறுவடை முடிந்த பிறகும், அதிகப்படியான இலைகளை கைகளால் கிள்ள வேண்டும். அப்போதுதான் புதுக்கிளைகள் தோன்றி அதிக பூக்கள் வைக்கும்.

பூச்சி, நோய் தாக்குதலைப் பொறுத்தவரை, அசுவிணி தாக்குதல் அதிகமாக இருக்கும். அதற்கு பயோ மருந்தை தெளித்துக் கட்டுப்படுத்தலாம். அடுத்ததாக வைரஸ் தாக்குதல் அதிகமாக இருக்கும். அதற்கும் பயோ மருந்து கடைகளில் மருந்து கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தலாம். சாறு உறிஞ்சும்பூச்சி, தத்துப்பூச்சி, வெள்ளைக்கொசு தாக்குதலும் அதிகளவு இருக்கும். அதற்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைத் தெளிக்கலாம். மற்றபடி பீர்க்கன், புடலை இரண்டுக்கும் ஒரே பராமரிப்பு முறைதான்.

சாணிப்பால் விதை நேர்த்தி

தூசி, மண் இல்லாத பசும் சாணத்தை தேவையான தண்ணீர் ஊற்றி பால் பதத்துக்கு கரைத்துக்கொள்ள வேண்டும். அதில் விதைகளைக் கொட்டி, 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, விதைகளை எடுத்து பருத்தி துணியில் கொட்டி, நீரை வடிகட்ட வேண்டும். அதை துணியில் முடிச்சாக கட்டி, லேசாக தண்ணீரில் நனைத்து 6 மணி நேரம் நிழலில் வைத்துவிட வேண்டும். அதன் பிறகு விதைகளை எடுத்து நடவு செய்தால் முளைப்புத் திறன் நன்றாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!