15 சென்ட் நிலத்தை ரோட்டோவேட்டர் கொண்டு உழுது இரண்டு நாட்கள் காய விட வேண்டும். பிறகு, 5 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவில் குழி எடுத்து.. ஒவ்வொரு குழியிலும் ஒரு சட்டி ஆட்டு எரு போட்டு இரண்டு நாட்கள் ஆற விட வேண்டும். பிறகு, மேல் மண் கொண்டு குழியை மூடி.. ஒவ்வொரு குழியிலும் ஒரு சாண் இடைவெளியில் மூன்று விதைகள் வீதம் ஊன்றி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 15 சென்ட் நிலத்துக்கு 100 கிராம் விதை தேவைப்படும்.
ஒவ்வொரு வரிசையிலும் 10 அடி உயரமுள்ள மூன்று முருங்கைக்கம்புகளை 4 அடி இடைவெளியில் நட்டு வைக்க வேண்டும். அக்கம்புகளை ‘கம்பிவேலி அமைப்பது போல, கயிறுகளால் இணைத்துப் பின்னி விட வேண்டும். விதை ஊன்றிய 6-ம் நாளுக்கு மேல் முளைப்பு எடுக்க வேண்டும். 15-ம் நாளில் ஓர் அடி உயரம் வரை வந்து விடும். 15-ம் நாள் மற்றும் 30-ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். 20-ம் நாளுக்கு மேல் கொடிகளை கயிற்றில் படர விட வேண்டும். 30-ம் நாளுக்கு மேல் மொட்டு விட்டு 40-ம் நாளுக்குள் பூக்கத் தொடங்கும். 45-ம் நாளுக்கு மேல் ஒன்றிரண்டு காய்கள் வர ஆரம்பித்துவிடும்.
ஊட்டத்துக்கு பிண்ணாக்குக் கரைசல்!
50 லிட்டர் கொள்ளளவுள்ள பிளாஸ்டிக் டிரம் எடுத்துக் கொண்டு அதில்.. வேப்பம் பிண்ணாக்கு – 2 கிலோ, கடலைப் பிண்ணாக்கு -1 கிலோ, எள்ளு பிண்ணாக்கு – 2 கிலோ, பசுஞ்சாணம் – 5 கிலோ ஆகியவற்றைப் போட்டு கலந்துகொள்ள வேண்டும். அதனுடன், பசும்பால் – 2 லிட்டர், பசுமாட்டுச் சிறுநீர் – 5 லிட்டர் ஆகியவற்றை ஊற்றிக் கலக்கி டிரம் நிரம்பும் வரை தண்ணீர் சேர்க்க வேண்டும். இக்கரைசலை தினமும் காலையிலும் நான்கு நாட்கள் வரை நன்கு கலக்கி வர வேண்டும். பிறகு, இதை வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து பயிரில் தெளித்தால் பயிர் நன்கு ஊட்டமாக வளரும்.
இக்கரைசலைத்தான் பாகலுக்கு வாரம் இருமுறை தெளித்து வர வேண்டும்.
செம்மண்ணில் அதிக மகசூல்!
வெள்ளைப் பாகலுக்கு தனிப்பட்டம் கிடையாது. ஆண்டு முழுவதும் நடவு செய்யலாம். இது அனைத்து வகை மண்ணிலும் நன்கு வளரும் என்றாலும்.. செம்மண்ணில் அதிக மகசூல் கொடுக்கும்.