fbpx
March 9, 2018 சிறு, குறு விவசாயிகளுக்கு ஏற்ற வெள்ளரி சாகுபடி

சிறு, குறு விவசாயிகளுக்கு ஏற்ற வெள்ளரி சாகுபடி

கோடைப் பட்டத்தில் பலவிதமான பணப்பயிர்களை சாகுபடி செய்யலாம். இருப்பினும் கோடைப் பட்டத்தில் பயிர் சாகுபடிக்கு அபரிமிதமான பாசன நீர் கிடைக்காது. இருக்கும் நீரினை உபயோகித்து மார்க்கெட்டில் நல்ல விலை போகும். மற்றும் விளைச்சலை கொடுக்கும் பயிர்களை சாகுபடி செய்து பணம் சம்பாதிக்க வேண்டும்.

கோடைப் பட்டத்தில் நல்ல வருவாயினை தருவது வெள்ளரி சாகுபடி ஆகும். இந்தப் பயிர் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மிகவும் ஏற்றது. இந்த விவசாயிகளுக்கு அதிக நிலப்பரப்பு இருக்காது. இவர்கள் வெள்ளரி சாகுபடியை அரை ஏக்கர் அல்லது ஒரு ஏக்கர் தான் செய்ய இயலும். கிணற்றுப் பாசனம் இருந்தால் டீசல் இன்ஜின் கொண்டு பாசனம் செய்யும் வசதி தான் இருக்கும். கிணற்றில் தண்ணீர் இல்லை என்றால் சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயப் பணிகளை தொடரலாம். இந்த சிறு விவசாயி கள் கடும் கோடை வெய்யிலில் கடுமையாக உழைக்கத் தயாராக இருக்கிறார்கள். இவர்கள் சாகுபடிக்கு கூலி ஆட்கள் வைத்தாலும் அவர்களோடு குடும்ப நபர்களோடு இணைந்து வேலை செய்வார்கள். ஆதலால் விவசாயம் மிகுந்த அக்கறையோடு செய்யப்படுகின்றது. விவசாயப் பணிகள் குறிப்பிட்ட சமயத்திற்குள் செய்து முடிக் கப்படுகின்றது. இதனால் சாகுபடியில் இவர்களால் நல்ல லாபத்தினை எடுக்க இயலுகின்றது.

வெள்ளரி சாகுபடி காலம் 90 நாட்கள் ஆகும். பிஞ்சினை அப்படியே விட்டால் அது மிகப்பெரிய காயாக மாறி அதிக விதைகளைக் கொண்டு இருக்கும். இதனை விற்று லாபம் எடுக்க முடியாது. நுகர்வோர்கள் இக்கட்டத்திலுள்ள காய்களை விரும்புவதில்லை. இந்தக் காய்கள் சுவைப்பதற்கு ஏற்று வராது. ஆனால் இதில் அதிசயம் என்னவென்றால் வெள்ளரி காய்த்து பிஞ்சாக இருக்கும்போது அது சுவைமிக்கதாக இருக்கும். பிஞ்சு வெள்ளரி மூன்று தரம் கொண்டதாக இருக்கும். மிகச் சிறிய பிஞ்சுகள் நீளம் ஆறு அங்குலத்திற்குள் இருக்கும். இவைகள் மிகச் சுவை கொண்டதாக இருக்கும். ஒருவிதை கூட காயில் இருக்காது. இத்தகைய காய்களை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கிலோ ரூ.8 கொடுத்து வாங்கி பின்னால் தாங்கள் காய்களை கிலோ ரூ.25 வரை விற்கின்றனர். இரண்டாம் தரக்காய்கள் இவைகள் 9 அங்குலம் நீளம் வரை இருக்கும். இதன் விலை ரூ.15 வரை இருக்கும். பெரிய பிஞ்சுகள் இவைகளின் நீளம் 10 – 11 அங்குலம் இருக்கும். இதன் விலை கிலோவிற்கு ரூபாய் 10 வரை இருக்கும்.

முதல் இரண்டு தரம் கொண்ட காய்கள் சிரமம் இன்றி விற்பனையாகி விடும். மூன்றாம் தரக்காயில் விற்பனை சில சமயம் பிரச்னையாக இருப்பதுண்டு. பிஞ்சு வெள்ளரி தமிழ்நாட்டில் சிறப்பாக சாகுபடி செய்யப்படுகின்றது. சொட்டுநீர் பாசனத்திலும் சாகுபடி செய்யப்படுகின்றது. மார்க்கெட்டில் இருந்து வியாபாரிகள் வண்டியில் கிராமத்திலுள்ள விவசாயிகள் நிலங்களுக்கு நேரில் சென்று பிஞ்சு வெள்ளரியை விலைக்கு வாங்குகின்றனர். விவசாயிகளுக்கும் மார்க்கெட்டிற்கு எடுத்துச் சென்று விற்கின்றனர்.

சாகுபடி விவரங்கள் : விவசாயிகள் தனது டீசல் ஆயில் இன்ஜின் செட்டினை உபயோகித்து பாசனம் செய்து வெள்ளரி சாகுபடி செய்கின்றனர். விவசாயி ஒரு ஏக்கரில் வெள்ளரி சாகுபடி செய்ய தேவையான விதையினை தயார் செய்து கொள்கிறார். ஏக்கருக்கு 150 கிராம் விதையினை உபயோகப்படுத்த வேண்டும்.

விவசாயி தனது நிலத்தை டிராக்டர் கொண்டு ஒரு உழவு இட்டு அதனை வயல் பூராவும் மண்ணோடு சீராக கலந்து உழுது கொள்ள வேண்டும். பிறகு ஏக்கரில் 600 குழிகள் போட வேண்டும். நிலத்திற்கு அடியுரமாக 1-1/2 மூட்டை பேக்ட் அம்மோபாஸ் உரத்தைப் போட்டு மண்ணோடு கலக்க வேண்டும். நிலத்திலுள்ள குழிகளில் இயற்கை உரமும், ரசாயன உரமும் உள்ளது. உடனே குழிக்கு மூன்று விதைகள் விதைத்து தண்ணீர் விடுகின்றார்.

இவ்வாறு 15 நாட்கள் செய்து விட்டு பிறகு நிலத்தில் கால்வாய் போட்டு பாசனம் செய்ய வேண்டும். குழிகள் அனைத்திற்கும் ஏக்கருக்கு 1-1/2 மூட்டை பாரமாபாஸ் 20:20 உரம் இட வேண்டும். குழிகளில் களைச்செடிகளை குச்சிகளை உபயோகித்து அகற்ற வேண்டும். செடிகள் நன்கு பூக்கள் பிடித்து காய்கள் காய்க்கத் தொடங்கும். சாகுபடி சமயம் விவசாயி தனது பயிரினை பூச்சிகள், பூஞ்சாளங்கள் தாக்காமல் இருக்க தக்க பயிர் பாதுகாப்பு முறைகளை அனுசரிக்க வேண்டும்.

வெள்ளரி சாகுபடியில் பயிரில் விதைத்த 45-வது நாளிலிருந்து ஒரு நாள் விட்டு ஒருநாள் அறுவடையில் வருமானம் கிடைக்கின்றது. கோடை காலத்தில் குறுகிய நாட்களில் பலன் தரும் பிஞ்சு வெள்ளரி சாகுபடி “சிறு விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்” என்று சொல்வது பொருத்தமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!