ஏக்கருக்கு 5 டிப்பர் எருவைக் கொட்டி களைத்து, ஐந்து சால் உழவு செய்து மண்ணைப் பொல பொலப்பாக மாற்றி 5 அடி இடைவெளியில் வாய்க்கால்களை அமைத்துக் கொள்ள வேண்டும். வாய்க்காலின் மையப்பகுதியில் 3 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்குக் குழிகளை எடுத்து, ஒரு வாரம் ஆறவிட்டு.. ஒவ்வொரு குழியிலும் அரைக் கூடை எருவையும், மேல் மண்ணையும் கலந்து இட்டு நிரப்ப வேண்டும். பிறகு, ஒரு குழிக்கு நான்கு விதைகள் வீதம் ஊன்றிவிட வேண்டும்.
அசுவினியை விரட்டும் உரக்கலவை!
20-ம் நாளில் களை எடுத்துவிட்டு, 100 கிலோ எருவுடன், 5 லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலந்து ஒவ்வொரு செடிக்கும் நான்கு விரல் அளவுக்கு வைத்து தண்ணீர்விட வேண்டும். 30-ம் நாளுக்குமேல் பூவெடுக்க ஆரம்பிக்கும். அந்த சமயத்தில், டேங்குக்கு (10 லிட்டர்) 300 மில்லி வீதம் பஞ்சகவ்யாவைக் கலந்து தெளித்துவிட வேண்டும். ஒரு ஏக்கருக்கு 10 டேங்குகள் தேவைப்படும். 40-ம் நாளில் 10 கிலோ சாம்பல் தூள், 10 கிலோ வெள்ளாட்டுச் சாணத்தூள், 10 கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தூவி, தண்ணீர் கட்ட வேண்டும். இது அசுவினித் தாக்குதலைக் குறைக்கவும், காய்களைப் பெருக்க வைக்கவும் உதவும்.
காய்புழுவுக்கு பூச்சிவிரட்டி!
45-ம் நாளில் டேங்குக்கு (10 லிட்டர்) 500 மில்லி தேமோர் கரைசல் (இக்கரைசல் தயாரிப்பு முறை, இத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது) கலந்து தெளிக்க வேண்டும். 50-ம் நாளுக்கு மேல் காய்ப்பு எடுக்கும். பறிப்பு துவங்கியதும் வாரம் ஒரு முறை டேங்குக்கு (10 லிட்டர்) 300 மில்லி தேமோர் கரைசலோடு, 150 மில்லி பஞ்சகவ்யா கலந்து தெளிக்க வேண்டும். காய்புழுத்தாக்குதல் தென்பட்டால், டேங்குக்கு ஒரு லிட்டர் மூலிகைப் பூச்சி விரட்டியைக் கலந்து தெளித்துவிட வேண்டும். அல்லது டேங்குக்கு 50 மில்லி வேப்பெண்ணெய், சிறிதளவு காதி சோப் கரைசல் கலந்து தெளித்துவிட வேண்டும். இப்படி இயற்கை முறையில் சாகுபடி செய்யும் போது மகசூல் கூடுவதுடன், வெள்ளரிப் பிஞ்சுகள் சுவையாகவும் இருக்கும்.