fbpx

28. கூடா ஒழுக்கம்

குறள் 271:
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்

மு.வ உரை:

வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
வஞ்ச மனத்தவனின் திருட்டு நடத்தையைக் கண்டு அவன் உடம்போடு கலந்து இருக்கும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும் தமக்குள் சிரிக்கும்.

கலைஞர் உரை:
ஒழுக்க சீலரைப் போல உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும் பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும்


குறள் 272:

வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத்
தானறி குற்றப் படின்

மு.வ உரை:

தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்.சாலமன் பாப்பையா உரை:
தன் மீது தன் நெஞ்சமே குற்றம் சொல்லுமானால் மேலான நிலையினால் வரும் பலன்தான் என்ன?


கலைஞர் உரை:

தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர், துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை

குறள் 273:
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

மு.வ உரை:

மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:

கெட்டவன் நல்லவன் போல நடிப்பது, பசு புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மேய்ந்தது போலாகும்.

கலைஞர் உரை:
மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்று புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்

குறள் 274:
தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று

மு.வ உரை:

தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:

மேலான நிலையில் இருந்தும் கீழான செயல்களைச் செய்வது, வேட்டை ஆடுபவர் புதருக்குப் பின் மறைந்து நின்று பறவைகளைப் பிடிப்பது போலாம்.

கலைஞர் உரை:
புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பதற்கும், தவக்கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்களில் ஈடுபடுவதற்கும் வேறுபாடு இல்லை

குறள் 275:
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்
றேதம் பலவுந் தரும்

மு.வ உரை:

பற்றுக்களைத் துறந்தோம் என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம் என்ன செய்தோம் என்ன செய்தோம் என்று வருந்தும் படியான துன்பம் பலவும் தரும்.

சாலமன் பாப்பையா உரை:
எத்தகைய பற்றுகளும் இல்லாதவர் என்று வாயால் சொல்லிச் செயலால் தவறாக வாழ்பவரின் வாழ்க்கை, பிறகு ஏன் அப்படிச் செய்தோம் ஏன் அப்படிச் செய்தோம் என்று வருந்தும்படி பல துன்பங்களையும் தரும்.


கலைஞர் உரை:
எத்தகைய செயல் புரிந்துவிட்டோம் என்று தமக்குத் தாமே வருந்த வேண்டிய துன்பம், பற்றுகளை விட்டு விட்டதாகப் பொய்கூறி, உலகை ஏமாற்றுவோர்க்கு வந்து சேரும்.


குறள் 276:

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணா ரில்

மு.வ உரை:

மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர் எவரும் இல்லை.
 
சாலமன் பாப்பையா உரை:
மனத்துள் எதையும் வெறுக்காமல், வெளியே வெறுத்தவர் போல் ஏமாற்றி வாழும் மனிதரைக் காட்டிலும் கொடியவர், இவ்வுலகத்தில் இல்லை.

கலைஞர் உரை:

உண்மையிலேயே மனதாரப் பற்றுகளைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட இரக்கமற்றவர் யாருமில்லை

குறள் 277:
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து

மு.வ உரை:

புறத்தில் குன்றிமணிப்போல் செம்மையானவராய் காணப்பட்டாராயினும் அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உணடு.
 
சாலமன் பாப்பையா உரை:
குன்றிமணியின் மேனியைப் போல் வெளித் தோற்றத்தில் நல்லவராயும், குன்றிமணியின் மூக்கு கறுத்து இருப்பதுபோல் மனத்தால் கரியவராகவும் வாழ்வோர் இவ்வுலகில் இருக்கவே செய்கின்றனர்.

கலைஞர் உரை:
வெளித்தோற்றத்துக்குக் குன்றிமணி போல் சிவப்பாக இருந்தாலும், குன்றிமணியின் முனைபோலக் கறுத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு

குறள் 278:
மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்

மு.வ உரை:

மனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.

சாலமன் பாப்பையா உரை:
மனம் முழுக்க இருட்டு; வெளியே தூய நீரில் குளித்து வருபவர்போல் போலி வெளிச்சம் – இப்படி வாழும் மனிதர் பலர் இருக்கின்றனர்.

கலைஞர் உரை:
நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர்

குறள் 279:
கணைகொடியது யாழ்கோடு செவ்விதாங் கனை
வினைபடு பாலாற் கொளல்

மு.வ உரை:

நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

வடிவால் நேரானது என்றாலும் செயலால் அம்பு கொடியது. கழுத்தால் வளைந்தது ஆயினும் செயலால் யாழ் இனிது. அதனால் தோற்றத்தால் அன்றிச் செயலால் மனிதரை எடை போடுக.

கலைஞர் உரை:
நேராகத் தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும் வளைந்து தோன்றும் யாழ், இசை, இன்பம் பயக்கும் அது போலவே மக்களின் பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து கொள்ள வேண்டும்

குறள் 280:
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்

மு.வ உரை:

உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா.

சாலமன் பாப்பையா உரை:

உயர்ந்தோர் வெறுத்தவற்றை மனத்தால் ஒதுக்கிவிட்ட பின் தலைமுடியைச் சிரைத்தல், நீள வளர்த்தல் என்பன பற்றி எண்ண வேண்டா.
 
கலைஞர் உரை:
உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும்

error: Content is protected !!