இந்தியாவிலும் எகிப்திலும் 2500 ஆண்டுகளுக்கு மேலாக வசம்பு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பால் உணர்வு தூண்டுவியாக கருதப்பட்டது. செயல்தூண்டுவியாகவும், ஜீரணத்தை சரி செய்து பசியினை தூண்டவும் பயன்படுத்தப்பட்டது. சீனாவில் காணப்படும் Acorus gramineus எனும் தாவரம் வசம்பு போன்றே பயன்படுத்தப்படுகிறது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:
எளிதில் ஆவியாகும் எண்ணெய் அசரோன், சபோனின்கள், அகோரின் மற்றும் பிசின் பொருள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. அசரோன் மற்றும் குளுக்கோசைடான் அகோரின் தாவரத்தின் முக்கிய செயல் ஊக்கப் பொருள்களாகும்.
வயிற்று வலிக்கு மருந்து
வசம்பின் தரையடித்தண்டு மருந்தாகப் பயன்படுகிறது. உலர்த்தப்பட்ட தரையடித்தண்டு மணம் கொண்டது. செயல்தூண்டுவி. வடிநீராக உட்கொண்டால் உடலை வலுவாக்க உதவுகிறது. வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்போக்கினை சரி செய்யும்.
வயிற்று உப்புசம், பசியின்மை, ஆகியவற்றினை குணப்படுத்தும். அதிமதுரத்துடன் சேர்த்து குழந்தைகளின் இருமல், காய்ச்சல், வயிற்றுவலி முதலியவற்றிர்கு மருந்தாக கொடுக்கலாம்.
கிராமத்தில் கைவைத்தியம்
கிராமப்புறங்களில் குழந்தைகளுக்கு கைவைத்தியமாக வசம்பினை சுட்டு தொப்புளில் தடவி, வயிற்று வலியினைப் போக்குவதை பலகாலமாக கடைபிடித்து வருகின்றனர். அடிவயிற்றில் வாயு இருந்து வலி ஏற்படும் போது வசம்பின் சாம்பல் ஆமணக்கு அல்லது தேங்காய் எண்ணெயுடன் கலந்து அடிவயிற்றில் பூசினால் நீங்கும்.
குறைந்த அளவில் ஜீரணத்தினை தூண்டி நரம்புகளுக்கு வலிமை தருகிறது. வயிற்றின் அமிலத்தன்மையினை நீக்கும். அதிக அளவில் அமிலம் சுரக்க உதவுகிறது.
நச்சு முறிவு மருந்து
வசம்பு தாவர மருந்துகளின் தனிப்பெரும் தன்மையாக கருதப்படுகிறது. நேர் எதிரான நோய்களுக்கு ஒரே தாவரம் மருந்தாக அமைகிறது. பல நச்சுக்களுக்கு முறிவு மருந்தாக அமைவதால் தொற்றுநோய் பரவலின் போது தரையடித்தண்டு உட்கொள்ளப்படுகிறது. முந்திரிக்கொட்டை ஓட்டின் எண்ணெயுடன் கலந்து முடக்கு வாதத்திற்கு மேல் பூச்சாகிறது.
தொண்டை கரகரப்பு, மற்றும் இருமலுக்கு தரையடித்தண்டு வாயில் போட்டு மெல்லப்படுகிறது. உமில்நீர் சுரப்பினை அதிகரித்து சுகம் தரும். அதிக அளவில் உட்கொண்டால் வாந்தி ஏற்படும். வசம்பு நல்லதொரு பூச்சிக்கொல்லி மருந்து. கம்பளித்துணிகளில் பூச்சி வராமல் தடுக்கும்.