“ஆல்போல் தழைத்து அருகு போல் வேரோடி” என்று மணமக்களை வாழ்த்துவது தமிழர் பண்பாடு. இத்தகைய பெருமைக்குரிய அருகம்புல் இந்தியா முழுவதும் வளரும் ஒரு புல்வகையைச் சேர்ந்தது. கரும்பச்சை நிற இலைகளைக்கொண்ட அருகம்புல் பல அடி தூரங்களுக்கு தரையடித்தண்டு, வேர்கிழங்கு மூலம் பரவி காணப்படும்.
தெய்வாம்சம் மிக்க புல்
வீட்டுத்தோட்டத்தில் அருகம்புல்லை பயிரிடவேண்டும். விநாயகரின் விருப்பத்திற்குரிய அருகம்புல்லை விநாயகருக்குச் சமர்ப்பித்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். அருகம்புல்லை தூர்வாயுக்மம் என்பார்கள். உயிரினங்களின் துன்பங்களைத் தீர்ப்பவர் விநாயகர், மக்களின் எல்லா வகையான நோய்களையும் தீர்க்கும் மருத்துவ ஆற்றல் அருகம்புல்லுக்கு உண்டு. எனவே இதனை விநாயகருக்கு உரியதாக சொல்கின்றனர்.
மருத்துவகுணம்
மருத்துவகுணம் முழுத்தாவரமும், இலைகள் மற்றும் வேர் கிழங்குகள் மருத்துவப்பயன் கொண்டவை.
தாவரத்தின் தழைப்பகுதியின் சாறு சிராய்ப்புகளுக்கு பூசப்படுகிறது. இது தசை இருக்கும் தன்மை கொண்டது.
இலைகளின் சாறு குளிர்ந்த தன்மையுடையது. இதனை பாலுடன் கலந்து பருகினால் மூலநோய் ரத்த கசிவு குணமாகும். சிறுநீர் கழிப்பு உறுப்புகளின் எரிச்சலை போக்கும். வேர்களை அரைத்து தயிரில் கலந்து பருகினால் புறமேக நோய் குணமாகும்.