வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. இதனை சரஸ்வதி கீரை என்றும் அழைக்கின்றனர். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ‘எ’, உயிர்சத்து ‘சி’ மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரியான அளவில் கொண்டுள்ளது.
மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரஸ்வதி கீரை என்றும் அழைக்கின்றனர். இதனாலேயே “வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே” என்ற பழமொழி ஏற்பட்டது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
அமினோ அமிலங்கள், சென்டிலிக் சென்டோயிக், அமிலங்கள், கரோடின், ஹைட்ரோ காட்டிலின், வெல்லிரைன், பிரமினோசைடு, விட்டமின் பி1, பி2 மற்றும் விட்டமின் சி, டேனிக் அமிலம் ஆகியவையும் இதில் அடங்கியுள்ளது.
வல்லாரையின் மருத்துவ பயன்கள்
அவரை விதை வடிவமுடைய இலைகளைக் கொண்ட வல்லாரை ஏழு பிரதான நரம்பமைப்பைக் கொண்டது. இதன் முழுத்தாவரமும் மருத்துவப்பயன் உடையவை. உடலின் வலு அதிகரிக்கவும் வைரஸ் நோய்க்குப் பிறகு உடல் தேறவும் உதவுகிறது. மூட்டுவலியைப் போக்குகிறது. சிறுநீர் போக்கினை தூண்டுகிறது. தூக்கமின்றி தவிப்பவர்களுக்கு நல்ல மருந்தாகிறது. ரத்தக்குழாய்களை நெகிழ்வடையச்செய்கிறது.
நினைவாற்றல் அதிகரிக்கும்
வல்லாரை இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது. இத்தாவரத்தினை சக்தி அளிக்கும் டானிக் மற்றும் நினைவாற்றலையும் கவனத்தையும் ஈடுபாட்டினையும் அதிகரிக்கவும் பயன்படுத்துகின்றனர். காலை வேளையில் வல்லாரையை பச்சையாக நன்கு மென்று விழுங்கி வந்தால், மூளை மிகுந்த செயலாற்றல் பெறும். காலைவேளையில் ஒரு கைப்பிடியளவுக் கீரையைப் பச்சையாக நன்கு மென்று விழுங்கிய பின், பசும்பால் உண்டு வர மாலைக்கண் நோய் குணமாகும். தொழுநோய் மற்றும் பால்வினை நோய்ப் புண்களை ஆற்ற சூரணமாகவும், கட்டுப்போடவும் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
இனப்பெருக்க ஆற்றலை அதிகரிக்கும்
இதிலுள்ள ஏஸியாடிக்கோசைடு என்னும் பொருள் புண்கள் ஆறுவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இது கொல்லஜென் என்னும் புரதம் தோன்றவும், புதிய ரத்தக் குழாய் உருவாதலையும் துரிதப்படுத்துகிறது. புண்கள் ஆறுதலின் பொழுது திசுக்களைச் சரி செய்ய ஆக்ஸிகரண எதிர்ப் பொருள்களின் அளவு அதிகரிக்கச் செய்கிறது. இது இனப்பெருக்க ஆற்றலை அதிகரிக்கக் கூடுமெனவும் கருதப்படுகிறது
மனநோய்கள் மறைய…
அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து, மூன்று வல்லாரை இலைகளைப் பச்சையாக மென்று தின்னவும். நான்கு மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்து, நன்கு பசியெடுத்தபின் அரை லிட்டர் பசும்பால் அருந்தவும். கூடியவரையில் உப்பு, புளி குறைத்த உணவினை உண்டு வர, மனநோய்களில் உண்டாகும் வன்மை மறைந்து, மென்மை உணர்வு மேலோங்கும். இதனால் சகல பைத்திய நோய்களும் தீரும்.
உடல் சோர்வு நீங்கும்
பசுமை இலைகள் குழந்தைகளின் வயிற்று போக்கினை தடுக்க பயன்படுத்தப்படுகிறது. அடிவயிற்றுக் கோளாறுகள், காய்ச்சல், ஆஸ்துமா மற்றும் சுவாசக்குழல் நோய்கள் ஆகியவற்றினைக் குணப்படுத்த உதவுகிறது. இதிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட எண்ணெய் பொருள் முடி வளர்தலை ஊக்குவிக்கிறது.
இரத்த சுத்திகரிப்பு வேலையைச் செவ்வனே செய்யும். உடல்புண்களை ஆற்றும் வல்லமைக் கொண்டது. தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமை கொண்டது. இதனைக் கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும். சளி குறைய உதவுகிறது.
உண்ணும் போது தவிர்க்க வேண்டியவை
இதனை உண்ணும் காலங்களில் மாமிச உணவுகள், அகத்திக் கீரை, பாகற்காய் ஆகியவற்றினை உண்ணக் கூடாது. புளி மற்றும் காரத்தினை மிகக் குறைவாகவே உண்ண வேண்டும். சிறுவர் அடிக்கடி உண்ணுதல் மிக்க நல்லது.
இக் கீரையை, சித்த மருத்துவர்கள் லேகியம், சூரணம், மாத்திரை போன்ற வடிவங்களில் பக்குவப்படுத்தி பயன்படுத்துகிறார்கள்.