‘மாதா ஊட்டாத சோற்றினை மாங்கனி ஊட்டும்” என்பது பழமொழி. தித்திப்பு நிறைந்த மாங்கனி, முக்கனிகளில் முதன்மையானது.
கோடை காலம் தொடங்கிவிட்டாலே மாம்பழமும் வரத்தொடங்கிவிடும். உஷ்ண மண்டல பிரதேசங்களில் விளையும் மாம்பழம் இந்தியர்களுக்கு பிடித்த பழங்களில் முதன்மையானது. 600 வகைகள் இருக்கும் மாம்பழத்தில், முக்கியமான 40 ரகங்கள் இந்தியாவில் விளைகின்றன. இது கடவுளின் கனி என்றும் வேதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிய சுவையுடன் பலவித சத்துக்களும் மாம்பழத்தைப் பற்றி சில தகவல்கள்.
வைட்டமின்களும், தாதுப்பொருட்களும்
மாம்பழத்தில் ஏ, பி, சி ஆகிய உயிர்ச்சத்துக்களும், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுப்பொருட்களும் உள்ளன. இதனை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. ரத்தத்தை சுத்திகரிக்கும் சக்தி உருவாகிறது. உடல் பலத்திற்கு மாம்பழம் மிகவும் ஏற்றது.
நோய் தீர்க்கும் மாம்பழம்
மூளைக்கும் உடலுக்கும் வலுவைக் கொடுக்க வல்லது. ஆண், பெண் இரு பாலருக்கும் நரம்புத் தளர்ச்சியை நீக்கும். மலச்சிக்கலையும் போக்கும். ஆண்களுக்கு வீரியத்தை கொடுக்க வல்லது. பெண்மை உணர்வுக்கும் இது உதவும்.
மாலைக்கண் நோய் கோளாறுகளுக்கும், பற்கள் தொடர்புடைய நோய்களுக்கும் மாம்பழம் கை கண்ட மருந்தாகும். மேனியில் சுருக்கமுள்ளவர்கள் மாம்பழத்தை சாப்பிட்டு வருவதால் சுருக்கம் நீங்கும் தோல் பளபளப்பாகும். மலச்சிக்கல் உள்ளவர்கள் மாம்பழத்தை இரவில் படுக்கும் முன் தொடர்ந்து சில நாட்கள் சாப்பிட்டு வர பூரண குணமடையும்.
பெண்களுக்கு ஏற்ற கனி
ஒழுங்கற்ற மாதவிடாய் உள்ளவர்கள் மாம்பழத்தை சாப்பிடுவதால் ஒழுங்கு படுத்தப்படும்.
கருவுற்றிருக்கும் தாய்மார்கள் மாம்பழத்தை சாப்பிட்டால் பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கை, கால், நடுக்கம், மயக்கம், போன்ற தொல்லைகளால் அவதியுறுவோர் காலை வேளையில் வெறும் வயிற்றில் மாம்பழத்தை சாப்பிட வேண்டும்.
மாம்பழம் அதிக உஷ்ணம் கொண்டது. எனவே நன்றாக இருக்கிறது என்பதற்காக அளவிற்கு அதிகமாக சாப்பிடுவது ஆபத்தில் முடியும். மாத விலக்கு சமயத்தில் பெண்கள் சாப்பிட்டால் உதிரப்போக்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது எனவே அளவுடன் சாப்பிடுவது நல்லது.
எப்படி சாப்பிடலாம்?
நன்றாக கனிந்த பழங்களை சாப்பிடுவதே சிறந்தது. கனியாத பழங்களையோ வெம்பிய பழங்களையோ சாப்பிடுவதால் பல நோய்கள் உண்டாகும். அதனால் காய்ச்சல், தலைவலி இருமல், வாந்தி, மலச்சிக்கல் போன்ற நோய்கள் ஏற்டும்.
மாம்பழத்தை அப்படியே கடித்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் பழத்தினுள் பூச்சிகளும், வண்டுகளும் இருப்பதால் அவற்றை கடித்து சாப்பிடும் போது அந்த பழங்கள் அப்படியே வயிற்றுக்குள் சென்றுவிடும் ஆபத்து உள்ளது. எனவே பழங்களை நறுக்கித்தான் உண்ண வேண்டும்.
உணவு சாப்பிடுவதற்கு முன் மாம்பழத்தை சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிடுவதால் அது பசியை அடக்கிவிடும். அதனால் உணவுடனோ, அல்லது சாப்பிட்ட பின்போ, மாம்பழத்தை சாப்பிடுவது நல்லது.