fbpx
January 18, 2019 மாயாஜாலம் நிகழ்த்தும் மசாஜ்!

மாயாஜாலம் நிகழ்த்தும் மசாஜ்!

உள்ளம் பெருங்கோவில், ஊனுடம்பே ஆலயம் என்றார் திருமூலர். உடலை தினமும் ஆராதித்து பேணுவதன் மூலம் உடலும், மனமும் புத்துணர்ச்சி அடைகின்றன. நம்மில் பலர் ஓயாத வேலைப்பளுவினால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனால் ஏராளமான நோய்களும் உருவாகின்றன.

தற்போது மசாஜ் சிகிச்சை முறை மனச்சுமையை நீக்குவதில் தற்போது முக்கிய பங்கு வகிக்கின்றன. மசாஜ் செய்வதால் உடலும் உள்ளமும் புத்துணர்சி பெறுகின்றன. மாயஜாலம் செய்யும் மசாஜ் பற்றி உடலியக்க நிபுணர்கள் தரும் சில முக்கியத் தகவல்கள் :

1.சருமம்:
மசாஜால் சருமம் பெறும் பலன்கள் இணையற்றவை. சருமத்தின் துளைகள் திறக்கப்பட்டு, வியர்வை மூலம் கழிவுகள் உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றன.

2.தசைகள்:
தசைகளின் இறுக்கத்தை மசாஜ் குறைத்து, தசை வலிகளை நீக்குகிறது. கடுமையான உழைப்பு, தசைகளில் கொஞ்சம் கொஞ்சமாக லக்டிக் அமிலத்தைச் சேர வைக்கிறது. தசைகளில் இருந்து அந்த லக்டிக் அமிலத்தை மசாஜ் நீக்குகிறது. அதன்மூலம் ஒரு புத்துணர்வையும் சக்தியையும் அளிக்கிறது.

3.ரத்த ஓட்டம்:
மசாஜ் செய்யப்பட்ட பகுதிகளில் இரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கிறது. அதனால் அங்கு அதிகமான சத்துகள் எடுத்துச் செல்லப்பட்டு, குணமாக்கும் சக்தியும் அதிகரிக்கிறது. இரத்த ஓட்ட வேகம் அதிகரிப்பது, வீக்கத்தைக் குறைக்கிறது.

4.நரம்புகள்:
இலேசான அழுத்தத்துடன் கூடிய மெதுவான, மென்மையான மசாஜ், நரம்புகளின் இறுக்கத்தைக் குறைத்து, அவற்றுக்கு இதமளிக்கும். சற்றுக் கடுமையான மசாஜ், தளர்வான நரம்புகளைத் தூண்டி, அவற்றின் திறனை அதிகரிக்கிறது.

5. வயிற்றில் மசாஜ்:
கீழ்வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வது, ஜீரண மண்டலத் தைத் தூண்டி, கழிவுகளை நன்றாக வெளியேற்ற வைக்கிறது. கல்லீரலின் திறன் அதிகரிப்பதால் உடலின் நோய் எதிர்ப்புத் திறன் வலுப்படுத்தப்படுகிறது.

6.சிறுநீரக மண்டலம்:
சிறுநீரக மண்டலத்தை மசாஜ் தூண்டுவதால் சிறுநீர் சேர்மானம் அதிகமாகிறது. எனவே உடலிலிருந்து நச்சுக் கழிவுகள் வெளியேற்றப்படுவதற்கு அதிக வாய்ப்பு ஏற்படுகிறது.

7.இதயம்:
முறையான மசாஜ், இதயத்தின் சுமையைக் குறைக்கிறது. அதன்மூலம் இதயத்தின் திறனையும் அதிகரிக்கிறது. சாதாரணமாக உலர்வான கைகளாலேயே மசாஜ் செய்யப்படுகிறது. ஆனால் சருமம் அதிக உலர்வாகவோ, மிகவும் பலவீனமாகவோ இருந்தால் ஈரமான துணி அல்லது மென்மையான எண்ணெய் மசாஜுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. நல்லெண்ணெய் மசாஜுக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது. மசாஜ் செய்யும்போது உராய்வைக் குறைப்பதற்காக சிலர் முகப் பவுடரை பயன்படுத்துவார்கள். அது தவறு. சருமத்தின் துளைகளை அது அடைத்துக் கொள்ளும்.

மசாஜ் செய்யும் முறை:
கை, கால்களில் இருந்து மசாஜை தொடங்க வேண்டும். அடுத்து, நெஞ்சு, கீழ்வயிறு, பின் புறம், பின்புற இடுப்பு ஆகிய பகுதிகளில் மசாஜ் செய்ய வேண்டும். முகம் அல்லது தலையில் வந்து முடிக்க வேண்டும். பின்புறத்தில் மசாஜ் செய்வதற்கு துணியைப் பயன்படுத்தலாம். முடிந்தவரை நமக்கு நாமே மசாஜ் செய்து கொள்ளலாம். அப்போது அது ஒரு நல்ல உடற் பயிற்சியாகவும் அமையும்.

சுயமாக மசாஜ் செய்து கொள்ள முடியாத அளவு பலவீனமானவர்கள் மற்றவர்களின் உதவியை நாடலாம். மசாஜூக்குப் பின் குளிக்கலாம், அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் நனைத்த துணியால் உடம்பைத் துடைக்கலாம்.

உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்களுக்கு மசாஜ் தலைகீழாக செய்யப்பட வேண்டும். அதாவது தலையில் ஆரம்பித்து காலில் முடிக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை
காய்ச்சலடித்தால் எந்தவகை மசாஜும் செய்யக் கூடாது. கர்ப்பிணிகளுக்கு கீழ்வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்யக் கூடாது. வயிற்றுப்போக்கு, வயிற்றுப்புண், குடல்வால் பிரச்சினை, கட்டிகள் இருந்தாலும் கீழ்வயிற்றில் மசாஜ் செய்யக்கூடாது. ·சரும வியாதிகள் உள்ளவர்களுக்கு மசாஜ் ஏற்றதல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!